50 வயதுக்கு மேலும் எலும்பு இரும்பு போல் இருக்க உதவும் சூப்பர் உணவுகள்


எலும்புகள் நம் உடலின் கட்டமைப்பின் அஸ்திவாரமாக பார்க்கப்படுகின்றன. ஆரோக்கியமான மற்றும் ஃபிட்டான வாழ்கைக்கு எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதும் மிக அவசியமாகும்.

ஆனால், வயதாக ஆக, எலும்புகளின் தேய்மானம் அதிகமாகி அவை வலுவிழக்கின்றன. வயதாகும்போது எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒரு பெரிய சவாலாகவே பார்க்கப்படுகின்றது. குறிப்பாக 50 வயதிற்கு பிறகு, எலும்பு பலவீனம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல பிரச்சனைகள் வரத் தொடங்குகின்றன.

ஆகையால், எலும்புகளை (Bones) கூடுதல் கவனம் எடுத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு சரியான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானது. எலும்புகளுக்கு வலுவளித்து, தேய்மானங்களால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து, தேய்மானங்களை தவிர்க்கும் உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். எலும்புகளை வலுவாக வைத்திருக்க நாம் நமது அன்றாட டயட்டில் சேர்க்க வேண்டிய சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் (Milk), தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாக பார்க்கப்படுகின்றன. வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். கால்சியம் மட்டுமல்லாமல், பால் பொருட்களில் வைட்டமின் டி உள்ளது. இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. பால் பொருட்களை உட்கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு சோயா பால் அல்லது பாதாம் பால் போன்ற மாற்றுகளும் நல்லதாக கருதப்படுகின்றன.

பச்சை இலை காய்கறிகள்

கீரை, வெந்தயம், கடுகு கீரை, பசலைக் கீரை, பிற பச்சை இலை காய்கறிகள் (Green Leafy Vegetables) ஆகியவற்றில் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிகமாக உள்ளன. இந்த சத்துக்கள் எலும்பின் கட்டமைப்பை வலுப்படுத்த உதவுகின்றன. ஆரோக்கியமான எலும்பு உருவாக்கத்தில் வைட்டமின் கே முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி (Broccoli) ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகின்றது. இது பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ள காயாகும். இது எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக அளவு கால்சியம், வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளன. ப்ரோக்கோலியை உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.

கொட்டைகள் மற்றும் விதைகள்

பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்கள் (Dry Fruits) மற்றும் சியா விதைகள், எள் போன்ற விதைகளில் (Seeds) எலும்புகளுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் அதிக அளவு கால்சியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் அதிகமாக உள்ளன. தினமும் இவற்றை ஒரு கையளவு உட்கொள்வது எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மீன்

சால்மன், மத்தி மற்றும் ட்ரவுட் போன்ற மீன்களில் (Fish) ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் உள்ளன. வைட்டமின் டி எலும்புகளுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. வாரம் இருமுறை மீன் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும், ஆரோக்கியமாக இருக்கும்.
Previous Post Next Post