தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? நரகாசுரன் யார் தெரியுமா? பூமாதேவி கொடுத்த வரம் என்ன?


தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? தீப ஒளி அன்று நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

தித்திக்கும் தீபாவளி! வட இந்தியாவில் தீபாவளி அன்று வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடுவது வழக்கம். அது போல் தென்னிந்தியாவில் எந்த மாதிரியான கொண்டாட்டங்கள் இடம் பெறும் என்பதையும் பார்ப்போம்.

ஒவ்வொன்றுக்கும் காரண காரியங்கள் இருக்கும். அது போல் தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம். தீமை விலகி நன்மை பிறக்கும் நாள் தீபாவளி என்கிறார்கள். நரகாசுரனை திருமால் அழித்த நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

என்னாது ஒருவரது இறப்பை கொண்டாடுகிறோமா என நினைக்காதீர்கள். நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்ற போது அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்கு பிறந்தவன்தான் நரகாசுரன்.

அசுரர்களை வதம் செய்யும் போது பிறந்ததால் இவனுக்கு அசுர குணங்கள் அமைந்துவிட்டது. மனிதனாக பிறந்தாலும் துர் குணங்கள் இருந்ததால் அவனுக்கு நரகாசுரன் என பெயர் வந்தது. தேவர்களுக்கும் மக்களுக்கும் பல துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார்.

ஆனால் நரகாசுரனோ பூமித்தாயான பூமா தேவிக்கு பிறந்தவனாயிற்றே என யோசித்தார். மேலும் அவனை அவன் தாயை தவிர வேறு யாராலும் கொல்ல முடியாத வரத்தை பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணுவுக்கு ஒரு யோசனை வந்தது. அதாவது நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டதும் அவர் மயக்கம் போட்டு விழுவது போல் விழுந்தார். இதை பார்த்த சத்யபாமா, கோபத்தில் நரகாசுரனை போர் செய்ய அழைத்தார். சத்தியபாமா பூமியின் அவதாரம் என்பதை தெரியாத நரகாசுரன் போரிட்டான். சத்யபாமாவின் அம்புக்கு பலியாகி சரிந்துவிழுந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என தெரியவந்தது.

அப்போதும் நரகாசுரன், தனது தாயிடம் ஒரு வரம் கேட்டார். "அம்மா நான் இறந்த இந்த நாள் மக்கள் மனதில் நிலைத்து நிற்க வேண்டும். எனது பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்" என வரம் கேட்டானாம்.

அப்போது சத்யபாமா அந்த வரத்தை கொடுத்தார், இதைத்தான் நாம் தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். தீபாவளி பண்டிகைக்கு வாசலில் மாக்கோலம் போட வேண்டும். பிறகு அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஒரு வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

அதில் சிறிதளவு விரலி மஞ்சளின் முனை, வேப்பங்கொழுந்து, உளுத்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை போட்டு பொரிய விட்டு அடுப்பை அணைத்துவிட்டு தும்பை பூவையும் அதில் போட்டு பொரிய விட்டு ஆறியதும் தலை முதல் கால் வரை தேய்த்து ஊறியதும் சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.

வீட்டில் கங்கா ஜலம் இருந்தால் அதையும் குளிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் நாம் குளிக்கும் நீரையே கங்கை நதியாக கருதலாம். குளித்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டு பட்டாசுகளில் சிலவற்றை எடுத்து சுவாமி முன் வைத்து விளக்கேற்றி (பட்டாசு இருப்பதால் ஜாக்கிரதை) எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக தீபாவளி கொண்டாட வேண்டும் என வேண்டி கொண்டு பிறகு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். வீட்டில் செய்த அல்லது கடைகளில் வாங்கிய பலகாரங்களை அக்கம்பக்கத்தார், சொந்த பந்தங்களுக்கு கொடுத்து வயதில் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
Previous Post Next Post