மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு சமக்ர சிக்ஷா அபியான் என்ற திட்டத்தை தொடங்கியது.சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா, ஆசிரியர் கல்வி திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையிலான இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கி வருகிறது.
அதாவது, மொத்த நிதியில், மத்திய அரசு சார்பில் 60 சதவீதமும், மாநில அரசு சார்பில் 40 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் மத்திய அரசு ரூ.2,152 கோடியை தன் பங்கு நிதியாக வழங்க இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதில் முதல்கட்ட நிதியான ரூ.573 கோடியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. இதற்கிடையே, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆர்.டி. ஐ மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் படி, 2024-25-ம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்ஷா அபியான் நிதியை வழங்க சில நிர்வாக அனுமதி பெற வேண்டியிருப்பதாகவும், இந்த செயல்முறைகள் முடிந்த பிறகு எப்போது நிதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் (2020-21-ம் கல்வியாண்டில் இருந்து 2023-24-ம் கல்வியாண்டு வரை) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக முன்மொழியப்பட்ட மத்திய அரசின் பங்கான ரூ.7 ஆயிரத்து 508 கோடியே 27 லட்சத்தில், ரூ.7 ஆயிரத்து 199 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:
கல்விச் செய்திகள்